கிருஷ்ண ஜன்ம பூமியின் மறக்கப்பட்ட வரலாறு

 கிருஷ்ண ஜன்ம பூமியின் மறக்கப்பட்ட வரலாறு

பிரபு ஸ்ரீராமருக்கு அவரது ஜன்ம பூமியில் கோவில் கட்ட பூமி பூஜை செய்தாகி விட்டது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வுக்குப் பின் வரும் முதல் கோகுலாஷ்டமியில் “காசி மதுரா பாக்கி ஹே” (காசி மதுரா மீதி உள்ளது) என்ற ராம ஜன்ம பூமி இயக்க கோஷத்தை நினைவுகூராத எவரும் இருக்க முடியாது. ராம ஜன்ம பூமியை மீட்டெடுக்க இந்துக்கள் இத்தனை காலமாக நடத்தி வந்த போரைப் பற்றி அதிக அளவில் பேசப்பட்டாலும் இன்னொரு முக்கியமான புனித க்ஷேத்திரமான மதுராவைப் பற்றிய விழிப்புணர்வு அவ்வளவாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

மதுரா தான் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பிறப்பிடம் என்பது அனைவரும் அறிந்ததே. ஆவணி மாதம் ரோஹிணி நக்ஷத்திரமும் அஷ்டமி திதியும் இணைந்து வந்த ஓர் நள்ளிரவில் கொடூரன் மாமன் கம்சனால் மதுரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த வசுதேவருக்கும் தேவகிக்கும் கிருஷ்ண பரமாத்மா மகனாக அவதரித்தார் என்பதும் அனைவரும் அறிந்ததே. வாசுதேவ் சரண் அகர்வால் மற்றும் ஸ்ரீ கிருஷ்ண தத்த வாஜ்பாயி போன்ற வரலாற்று அறிஞர்கள் பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் ஔரங்கசீப்பால் கட்டப்பட்ட ஷாஹி இட்கா தற்போது இருக்கும் இடத்தில் இருந்த கேசவராய் கோவில் என்று அழைக்கப்படும் கத்ரா கேசவதேவ் கோவில் அமைந்திருந்த இடம் தான் உண்மையில் கிருஷ்ணர் அவதரித்த இடம் என்று உறுதி செய்துள்ளனர்.

கிருஷ்ண ஜன்ம பூமியின் பழைய வரலாறு

குஜராத்தில் அமைந்திருக்கும் சோமநாதர் ஆலயத்தைப் போலவே மதுராவில் கிருஷ்ணரின் நினைவாக அவரது ஜன்ம பூமியில் கட்டப்பட்ட கோவிலும் பல முறை காட்டுமிராண்டித்தனமான படையெடுப்பாளர்களின் கையில் சிக்கி சின்னா பின்னமானது. சோமநாதரை அவரது ஆலயத்தில் மீண்டும் நிறுவி விட்ட நாம் மதுரா கிருஷ்ணரை மறந்து விட்டோம். எனவே கிருஷ்ண ஜன்ம பூமியில் பிரச்சினை இன்னும் தீரவில்லை. இதுவரை கிருஷ்ணருக்காக மதுராவில் உள்ள அவரது ஜன்ம பூமியில் கட்டப்பட்ட கோவில்களையும் படையெடுப்பாளர்களால் அவை சந்தித்த இன்னல்களையும்‌ பற்றி பார்ப்போம்.

  • முதல் முதலில் கிருஷ்ணரின் பேரன் வஜ்ரநாபா தான் ஜன்ம பூமியில் கிருஷ்ணருக்கு கோவில் கட்டினார் என்பது பரவலான நம்பிக்கை.
  • அதன் பின்னர் குப்தர்கள் காலத்தில் பேரரசர் சந்திரகுப்த விக்ரமாதித்யர் ஒப்பில்லாத கட்டிடக்கலைச் சிறப்புகளுடன் கோவிலை விஸ்தரித்தார் என்று கூறப்படுகிறது. அத்தோடு மதுராவை கலாச்சார மற்றும் கலை மையமாகவும் சந்திரகுப்தர் மாற்றியுள்ளார். எனினும் பொயுமு 1017ல் முகமது கஜ்னாவியால் இந்தக் கோவில் தரைமட்டமாக்கப்பட்டது.
  • பொயுமு 1150ல் விஜயபால தேவ் என்ற‌ அரசரின் ஆட்சிக்காலத்தில் ஜஜ்ஜா என்பவர் மீண்டும் கிருஷ்ணருக்குக் கோவில் எழுப்பியுள்ளார். இந்தக் கோவிலும்‌ நிஜாம் கான் என்று அறியப்பட்ட சிக்கந்தர் லோதியால் 16ம் நூற்றாண்டில் அழிக்கப்பட்டது.
  • நான்காவதாக ஒரு முறை மீண்டும் எழுப்பப்பட்ட கிருஷ்ணர் கோவில் ஜஹாங்கிரின் ஆட்சிக் காலத்தில் ராஜா பீர்சிங் புந்தேலாவால் கட்டப்பட்டது. இறுதியில் இந்தக் கோவிலும் 1670ம் ஆண்டு ஔரங்கசீப்பால் இடித்துத் தள்ளப்பட்டு தற்போதுள்ள ஷாஜி இட்கா மசூதி கட்டப்பட்டது. ஔரங்கசீப் மதுராவின் பெயரையே இஸ்லாமாபாத் என்று மாற்றிய அவலமும் நடந்தேறியுள்ளது.

கிருஷ்ணர் கோவிலை அழித்த ஔரங்கசீப்பின் கொடுஞ் செயல்

மூன்றாவது முறையாக மதுராவில் கட்டப்பட்ட கிருஷ்ணர் கோவில் சிக்கந்தர் லோதியால் அழிக்கப்பட்ட பிறகு முகலாயப் பேரரசின் கீழ் உர்ச்சா என்ற பகுதியை ஆண்டு வந்த ராஜா பீர் சிங் புந்தேலா கிருஷ்ண ஜன்ம பூமியில் மீண்டும் ஒரு  கோவிலை எழுப்பினார். ஔரங்கசீப்பின் ஆட்சிக் காலத்தில் நடந்த நிகழ்வுகளை பதிவு செய்த மாசிர்-இ-ஆலம்கிரி என்ற பதிவேட்டில் கூறியுள்ளபடி அக்பர்நாமாவை எழுதியவரும் முகலாயர்களின் அவையில் தலைமை அமைச்சராக இருந்தவருமான ஷேக் அபுல் ஃபசல், அக்பருக்குப் பின் ஜஹாங்கிர் அரசராகப் பொறுப்பேற்பதை எதிர்த்தால் ஜஹாங்கிரின் உத்தரவின் பேரில் ராஜா பீர்சிங் புந்தேலா அபுல் ஃபசலைக் கொன்று விட்டதாகத் தெரிய வருகிறது. இந்த நிகழ்வு ராஜா புந்தேலாவுக்கு ஜஹாங்கிரிடம் நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது. அரசராகப் பதவி ஏற்ற பின் ஜஹாங்கிர் புந்தேலாவின் சேவைகளுக்கு பரிசளிக்க விரும்பியபோது சற்றும் தயங்காமல் கிருஷ்ண ஜன்ம பூமியில் கேசவனுக்கு கோவில் எழுப்ப அனுமதி வேண்டும் என்று கேட்டிருக்கிறார். எந்த அளவுக்கு கிருஷ்ண ஜன்ம பூமியை மீட்கும் தாகம் இந்துக்களின் மனதில் ஊறிப்போயிருந்தது என்பதற்கு இந்த நிகழ்வே சாட்சி! தனக்கென்று சுயநலமாக ஏதும் கேட்காமல் கிருஷ்ணருக்கு கோவில் கட்ட விழைந்த அன்றைய இந்துக்களின் பக்திக்கு இதைவிட பெரிய சாட்சியம் வேறேதும் வேண்டுமா? பிற இஸ்லாமியர்கள் போலவே இந்து சம்பிரதாயங்களை வெறுத்த ஜஹாங்கிர், ராஜா புந்தேலாவின் நட்பு முக்கியம் என்று கருதியதால் கிருஷ்ண ஜன்ம பூமியில் கோவில் கட்ட அனுமதி வழங்கினார்.

இவ்வாறு சுமார் 33 லட்சம் செலவில் பகவான் கிருஷ்ணருக்கு அற்புதமான கோவில் ஒன்றை எழுப்பினார் ராஜா புந்தேலா. ஆனால் வெறும் அரை நூற்றாண்டே நீடித்த கேசவ ராய் தேரா என்றழைக்கப்பட்ட இந்தக் கோவில் ஜஹாங்கிரின் பேரன் ஔரங்கசீப்பின் காஃபிர்களை ஒழிக்கும் போரில் அவனது படையினரால் தரைமட்டமாக்கப்பட்டது. அத்தோடு நில்லாமல் அந்தக் கோவிலில் இருந்த தேவ, தேவிகளின் மூர்த்திகள் அனைத்தையும் ஆக்ராவில் இருக்கும் பேகம் சாஹிப் மசூதிக்கு அடியில் போட்டு வைத்தார்கள்.‌ அப்படிச் செய்தால் தானே இஸ்லாம் மீது ‘நம்பிக்கை உள்ளவர்கள்’ அவர்களது மதத்தின் மேல் நம்பிக்கை வைக்காத ‘காஃபிர்’களின் நம்பிக்கைகளை தொடர்ந்து காலின் கீழ் போட்டு மிதித்துக் கொண்டே இருக்கலாம். இதெல்லாம் போதாதென்று கிருஷ்ண ஜன்ம பூமியில் ஷாஹி இட்கா என்ற மசூதியைக் கட்டச் சொல்லி மதுராவின் இந்து அடையாளத்தை அழிக்க அதன் பெயரையும் இஸ்லாமாபாத் என்று மாற்றச் சொல்லி உத்தரவிட்டான்.

மதுராவை மீட்ட சிந்தியாக்கள்

பேஷ்வா முதலாம் பாஜி ராவின் சர்தாராக இருந்த ரானோஜி ராவ் சிந்தியா தான் சிந்தியா அரச வம்சத்தைச் தோற்றுவித்தவர். மராத்தியர்களின் எழுச்சியால் முகலாயர்களின் ‌செல்வாக்கு குறையத் தொடங்கிய கால கட்டத்தில்‌ தான் குவாலியர் மற்றும் உஜ்ஜயினியுடன் சிந்தியாக்கள் தொடர்புபடுத்தப்பட்டார்கள். ரானோஜியின் ஐந்தாவது மகனான மஹதாஜி சிந்தியா வட இந்தியாவில் மராத்தியர்களின் செல்வாக்கை அதிகரித்ததில் முக்கியப் பங்கு வகித்தார். 1775ல் தனியாளாக மதுராவைக் கைப்பற்றி இஸ்லாமிய ஆட்சியில் இருந்து விடுவித்தார் மஹதாஜி சிந்தியா. தீவிர கிருஷ்ண பக்தரான மஹதாஜி மதுராவில் சிதிலமடைந்திருந்த பல கோவில்களை புனரமைத்ததோடு ஒரு சமஸ்கிருத பாடசாலையையும் ஏற்படுத்தினார். உள்ளூர் வழக்கின் படி கிருஷ்ண ஜன்ம பூமியில் கட்டப்பட்ட ஷாஹி இட்காவில் நமாஸ் செய்யத் தடை விதித்து, அந்த நிலத்தை மஹதாஜி அரசுடைமை ஆக்கியதாகக் கூறப்படுகிறது. இரண்டாவது பிரிட்டிஷ்-மராத்திய போருக்குப் பின்னர் அந்த நிலம் பிரிட்டிஷார் கைக்குப் போனது.

பிரிட்டிஷாரிடம் இருந்து அலகாபாத் நீதிமன்றம் வரை சென்ற நில உரிமை பிரச்சினை

1815ம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சியின் கீழ் கிருஷ்ண ஜன்ம பூமி முழுவதையும் கிழக்கிந்தியக் கம்பெனி ஏலம் விட்டது. அப்போது பனாரஸ் ராஜாவாக இருந்த ராஜா பன்டிமால் கிருஷ்ண ஜன்ம பூமியில் கிருஷ்ணருக்குக் கோவில் எழுப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் ஏலம் எடுத்த போதும் துரதிருஷ்டவசமாக அவரால் கோவில் கட்ட முடியாமல் போனது. இந்த நிலையில் கிருஷ்ண ஜன்ம பூமி நிலம் அவரது வழித்தோன்றல்களுக்குச் சொந்தமானது‌. 1930ல் ராஜா பன்டிமாலின் வாரிசான ராஜ் கிருஷ்ண தாசுக்கு எதிராக மதுரா முஸ்லிம்கள் இரண்டு சிவில் வழக்குகளைப் பதிவு செய்தனர். அலகாபாத் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட இந்த வழக்கில் நிலத்தின் உரிமை தங்களுக்கு மாற்றித் தரப்பட வேண்டும் என்று முஸ்லிம்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் அலகாபாத் உயர்நீதிமன்றம் இந்த கோரிக்கையை நிராகரித்து ராஜ் கிருஷ்ண தாசின் உரிமையை நிலைநாட்டியது. 1935ல் கிருஷ்ண ஜன்ம பூமியின் நில உரிமை முழுமையாக இந்துக்களின் கையில் இருந்தது.

பண்டித் மதன் மோகன் மாலவியாவின் பங்கு

1940ல் மதுராவிற்கு வந்த பண்டித் மதன் மோகன் மாலவியா கிருஷ்ண ஜன்ம பூமியின் நிலையைப் பார்த்து வேதனை அடைந்தார். மீண்டும் ஜன்ம பூமியில் கோவில் எழுப்ப தொழிலதிபர் ஜுகல் கிருஷ்ண பிர்லாவின் உதவியை நாடினார் மாலவியா. மாலவியாவின்‌ ஆசைக்கிணங்க பிப்ரவரி 7,1944ல் ராஜா பன்டிமாலின் வாரிசிடம் இருந்து கிருஷ்ண ஜன்ம பூமியை விலைக்கு வாங்கினார் பிர்லா. ஆனால் கோவில் பணியைத் தொடங்கும் முன் துரதிர்ஷ்டவசமாக மாலவியா இறந்து விட்டார். எனவே அவரது ஆசையை‌ நிறைவேற்றும் வண்ணம் பிப்ரவரி 21,1951ல் தொழிலதிபர் பிர்லா ஸ்ரீ கிருஷ்ண ஜன்ம பூமிக்கென்று ஒரு அறக்கட்டளை ஆரம்பித்து ஜன்ம பூமியின் நில உரிமையை அறக்கட்டளைக்கு மாற்றி வைத்தார். முக்கியஸ்தர் ஜெய்தயாள் டால்மியா உட்பட பல பிரபலமான இந்துத் தலைவர்கள் இந்த அறக்கட்டளையின் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். பின்னர் ஸ்ரீ கிருஷ்ண ஜன்மஸ்தான் சேவா சங்கம் என்ற பெயரில் கோவில் கட்டுமானத்தைத் துவங்கவும் ஜன்மஸ்தானத்தை‌ பராமரிக்கவும் ஒரு அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.

முஸ்லிம்களின் உரிமைக் கோரலும் 1968 ஒப்பந்தமும்

இந்த முன்னேற்றங்களைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் முஸ்லிம்கள் நிலத்திற்கு உரிமை கோரி மேலும் ஒரு வழக்கைப் பதிவு செய்தனர். ஆனால் அந்த வழக்கும் 1960ல் தூக்கிக் கடாசப்பட்டு கிருஷ்ண ஜன்ம பூமி அறக்கட்டளைக்குத் தான் நிலம் சொந்தம்‌ என்றும் முஸ்லிம்கள் ஈத்‌ பண்டிகையின் போது மட்டுமே தொழுகை நடத்தலாம் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இட்காவின் மேற்குச் சுவரை ஒட்டி ஜன்மஸ்தானத்தில் ஒரு தளம் ஏற்படுத்தப்பட்டது. இந்த கட்டுமானத்திற்கு எதிராக இன்னும் ஒரு வழக்கு பதியப்பட்டது. இதற்கிடையில் நாட்டில் அரசியல் சூழ்நிலையும் மாறிக் கொண்டிருந்தது. 1967ல் காங்கிரஸ் உத்திரப் பிரதேச சட்டசபைத் தேர்தலில் தோற்றுப் போனது. சரண் சிங் காங்கிரஸில் இருந்து பிரிந்து தனிக்கட்சி தொடங்கி இரண்டாவது பெரிய கட்சியாக இருந்த ஜன சங்கத்துடன் கூட்டணி அமைத்து முதல்வரானார். காங்கிரஸ் அல்லாத மாநில அரசுகளைக் கவிழ்த்து வந்த இந்திரா காந்தி 1968 பிப்ரவரி மாதத்தில் உ.பியில்‌ ஜனாதிபதி ஆட்சியைக் கொண்டு வந்தார். இந்த சமயத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டு சமரசம் செய்து வைக்கிறோம் என்ற பெயரில் உள்ளூர் அதிகாரிகளின் ‘மேற்பார்வையில்’ ஸ்ரீ கிருஷ்ண ஜன்மஸ்தான் சேவா சங்கம் மற்றும் ஷாஹி இட்கா மசூதி அறக்கட்டளை இடையே ஒரு‌ சமரச ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இதன்படி இட்காவையும் அதற்கென்று ஒதுக்கப்பட்ட ‌சில பகுதிகளையும் தவிர எஞ்சிய நிலத்திற்கான உரிமையை மசூதி அறக்கட்டளை விட்டுக் கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது.‌ இதை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க, நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டு அதன் பேரில் உத்தரவு பிறப்பித்தது.

இந்த சமரசம் செல்லுமா?

இந்த சமரச ஒப்பந்தத்தில் பல பிரச்சினைகள் இருக்கின்றன. கிருஷ்ண ஜன்மஸ்தான் அறக்கட்டளை ஏற்படுத்தப்பட்டதன் நோக்கமே ஜன்ம பூமியில் கிருஷ்ணருக்கு கோவில் கட்டப்பட வேண்டும் என்பது தான். அதற்கு மாறான குறிக்கோளுடன் எந்த ஒப்பந்தமும் போட இயலாது. அவ்வாறு செய்வது அறக்கட்டளை நிர்வாகிகள் விதிகளை மீறுவதாகும். இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த சமரச ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது கிருஷ்ண ஜன்மஸ்தான் சேவா சங்கம். ஜன்ம பூமியின் நில உரிமை‌ இந்த அமைப்பிடம் இல்லை என்பதோடு இந்த அமைப்பு முழுக்க முழுக்க கோவில் கட்டுவதற்காக மட்டுமே ஏற்படுத்தப்பட்டது. நில உரிமை இன்னும் பிர்லா ஏற்படுத்திய‌ அறக்கட்டளையிடம் தான் உள்ளது. எனவே இந்த சமரச ஒப்பந்தம் செல்லாது என்பதோடு இதன் பேரில் இடப்பட்ட உத்தரவும் மாற்றப்பட வேண்டும்.

மத வழிபாட்டுத் தலங்கள் சட்டம்

கடந்த காலத்தில் பிற மதத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட இந்துக்களின் வழிபாட்டுத் தலங்களை இந்துக்கள் மீட்பதற்கான உரிமையை மறுத்து கடந்த 1991ல் காங்கிரஸ் அரசு கொண்டு வந்த சட்டம் தான் இந்த மத வழிபாட்டுத் தலங்கள் சட்டம். நாட்டில் உள்ள எந்த வழிபாட்டுத் தலத்தின் மத வழக்கும் ஆகஸ்ட் 15, 1947 அன்று இருந்தது போலவே தொடர வேண்டும் மற்றும் அதை மாற்றுவது தண்டனைக்குரிய குற்றம் என்றும் இந்தச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டது. இதிலிருந்து ராம ஜன்ம பூமிக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது.

தீர்வு

இந்துக்களுக்கு நீதி கிடைப்பதைத் தடுக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட‌ மத வழிபாட்டுத் தலங்கள் சட்டம் நீக்கப்பட வேண்டும் அல்லது மதுரா போன்ற பிற கோவில்களை‌யும் இந்துக்கள் மீட்க அனுமதிக்கும் வண்ணம் அவற்றுக்கும் விலக்கு அளித்து திருத்தப்பட‌ வேண்டும். சமரச உடன்படிக்கை செல்லுபடியாகாது என்பதால் நீதிமன்றம் அதன் பேரில் விடுத்த உத்தரவை மாற்ற வேண்டும். ஜன்ம பூமி நிலம் ஸ்ரீ கிருஷ்ண ஜன்ம பூமி அறக்கட்டளைக்கே உரியது. இந்த இந்துக்களுக்கு சொந்தமான நிலத்தில் தான் ஷாஜி இட்கா மசூதி அமைந்திருக்கிறது. எகிப்தில் அபு சிம்பல் என்ற வழிபாட்டுத் தலம் பிரித்து எடுக்கப்பட்டு மீண்டும் வேறு இடத்தில் நிலைநிறுத்தப்பட்டது போல் ஷாஹி இட்கா மசூதியையும் அரசே பெயர்த்தெடுத்து மதுராவில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான வேறொரு இடத்தில் நிலைநிறுத்தப்பட வேண்டும். நிலம், நீர், காற்று உட்பட பஞ்சபூதங்களையும், ஏன் இயற்கை முழுவதையுமே கடவுளின் அம்சமாக பாவிக்கும் இந்துக்களைப் போல் முஸ்லிம்களுக்கு நிலத்தை கடவுளாக பாவிக்க அவர்களது மத நூல்களில் அனுமதி இல்லை என்பதால் இஸ்லாமிய நாடுகளான அரபு நாடுகளில் கூட பல மசூதிகள் வளர்ச்சிப் பணிகளுக்காக இடிக்கப்பட்டு மதச்சார்பற்ற காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன. அதிகபட்சம் ஷாஹி இட்கா மசூதிக்கு வரலாற்று ரீதியாக பழமையானது என்ற தகுதி வேண்டுமானால் இருக்கிறது என்று கூறலாம். ஆனால் அது அமைந்திருக்கும் நிலப்பகுதி மீது முஸ்லிம்களுக்கு எந்த விதமான பற்றும் இல்லை. இந்துக்களுக்கோ அது பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் ஜன்ம பூமியாகிய புனித க்ஷேத்திரம். பல வழக்குகளில் இந்த நிலம் இந்துக்களுக்குத் தான்‌ சொந்தம் என்று‌ நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கி இருக்கின்றன. மசூதியை வேறொரு இடத்தில் அமைப்பது முஸ்லிம்கள் ஈத் அன்று மட்டுமல்லாது ஆண்டு முழுவதும் தொழுகை நடத்த வழி வகுக்கும்.

எனவே மசூதியை வேறொரு இடத்திற்கு மாற்றி‌ இந்துக்கள் தங்களது புனித க்ஷேத்திரத்தை மீட்டெடுத்து பண்டிதர் மதன் மோகன் மாலவியாவின் கனவை நிறைவேற்ற வழி செய்வதே சிறந்த தீர்வாக அமையும். நில உரிமைப் பிரச்சினை ஏற்கனவே பல முறை நீதிமன்ற வழக்குகள் மூலம்‌ தீர்க்கப்பட்டு விட்டதால் ராம ஜன்ம பூமியைப்‌ போல் நீண்ட சட்ட ரீதியான போரில் ஈடுபட அவசியமில்லை. புண்யபூமி மதுராவில் கிருஷ்ணர் ஜனனம் செய்த இடத்தில் அவருக்கு பிரம்மாண்டமான ஒரு கோவிலை அமைப்பதற்கு தேவைப்படுவதெல்லாம் கிருஷ்ண பிரேமிகளின் மன உறுதியும் இந்துக்களுக்கு நீதி வழங்கும் பொறுப்பில் இருக்கும் இந்நாள் உள்ள அரசாங்கத்தின்  ஒத்துழைப்பும் தான்.

Maha Krish

0 Reviews

Related post