ஆலய நிர்வாகம் – விடுதலை எப்போது ?

 ஆலய நிர்வாகம் – விடுதலை எப்போது ?

கோயில்களை மாநில அரசின் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்பது பல ஹிந்துக்களின் நீண்ட நாள் கோரிக்கை ! நம் உரிமையை கோரிக்கையாக வைக்கும் அவல நிலையில் வாழ்ந்து வந்த நிலையில் – இந்த எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக வலுப்பெற்று, கடந்த சில வருடங்களில் மக்களிடம்  வரவேற்பையும் பெற்று வருகிறது என்றால் அது மிகையாகாது.

தனிப்பட்ட சில தார்மீக ஹிந்துக்கள் இந்த விஷயங்களை முன்னெடுத்து, அவர்கள் நீதிமன்றப் படியேறி பல ஆண்டுகளாக எழுப்பிய கூக்குரலே, இன்று ஹிந்து ஆலயங்களில் நடைபெறும் அக்கிரமங்களை எதிர்த்து மக்களையும் உணர வைத்திருக்கிறது.

நடப்பது ஒரு தவறு ! நாம் நம் உரிமையை இழந்திருக்கிறோம் என்பது புரியவே இரண்டு தலைமுறை ஆகி இருக்கிறது ! இன்றைக்கும் பலர், ”இதில் தவறொன்றுமில்லை ! ஆலயங்களை அரசு ஏற்று நடத்துவதே சரி” என்று தர்க்க வாதம் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

மானமுள்ள ஹிந்துவாக வாழ்பவர் எவருக்கும், ஆலயங்கள் அரசின்  கோரப்பிடியில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. 

ஆனால் பலர் திட்டமிட்டே, கொஞ்சம் கொஞ்சமாக விஷம் ஏற்றுவது போல, ”அதெல்லாம் ஹிந்துக்களால் சரியாக நிர்வாகம் செய்ய முடியாது ! அப்படி அரசிடமிருந்து கோவில் நிர்வாகத்தை விடுவித்தால் கோவிலை யார்  நிர்வாகம் செய்வார்கள்? இது இன்னும் ப்ரச்சனைகளுக்கு வழி வகுக்கும்” என்று சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்லி, நம்மில் பலரும் கூட “ஆமாம் ! இவர்கள் சொல்வது சரிதானே” என்ற மனநிலைக்கு நம்மையும் அறியாமல் மாற்றப்பட்டு விட்டோம்.

இதே கேள்வியை திரும்பத் திரும்ப கேட்டு, “அரசிடம் இருப்பதால் தான் எல்லாம் ஒழுங்காக இருக்கிறது. அது நீங்கி பழைய  தர்மகர்த்தா முறையில்  ஆலய நிர்வாகம் வந்தால், ஆலய சொத்துக்கள் களவு போய்விடும்;  ஆலயங்களில் பணம் சூறையாடப்படும்; ஆலயத்துக்குள் சாதி ரீதியான  பாகுபாடுகள் புகுத்தப்பட்டு விடும்;  ஆலயநுழைவே சாதி ரீதியாக  பாகுபடுத்தப்பட்டு விடும்” என்றெல்லாம் பொய் பிரச்சாரம் கனஜோராக  நடைபெற்று வருகிறது.

இது குறித்து ஒரு புரிதலை கொடுக்க வேண்டும் என்பதே இந்த கட்டுரையின்  நோக்கம். 

இந்த கட்டுரையின் வாயிலாக  ஆலய நிர்வாகம் எவ்வாறு நடைபெறும் என்பதோடு, அதற்கு (ஹிந்து சமூகமே அலயத்தை சொந்தமாக நிர்வகிக்கும் திட்டத்துக்கு) எதிராக வைக்கப்படும் மூன்று முக்கியமான  குற்றச்சாட்டுகளையும் என்னவென்று பார்த்து அதற்கு பதில் அறிவோம். 

அரசிடமே ஆலய நிர்வாகம் இருக்க வேண்டும் என்று சப்பைக்கட்டு கட்டுவோர் சொல்லும் குற்றச்சாட்டுகள்:

  1. ஆலய நிர்வாகத்தை விட்டு அரசு நீங்கினால், ஆலயத்தின் நிர்வாக அமைப்பு சீர்குலைந்து விடும்.
  • அபரிமிதமான செல்வ வளம் மிக்க ஆலயங்களில் கோவில் சொத்து முறைகேடு செய்யப்படும். ஆலயத்தின் வரவு-செலவு கணக்குகள் என்னவென்றே யாருக்கும் தெரியமல் முறைகேடுகள் நடக்கும்
  • ஆலயத்துக்குள் சாதி ரீதியான பாகுபாடு ஏற்படும்

ஆலய நிர்வாகம் முறைப்படுமா?

முதலில் இந்த ஆலய நிர்வாகம் என்ற பகுதிக்கு வருவோம் ! அரசு என்ற ஒட்டகம் உள்ளே நுழைவதற்கு முன்பே பல்லாயிரம் ஆண்டுகளாக, நாம் நம் கோவில்களை நிர்வாகம் செய்து கொண்டு தானே இருந்தோம்? அந்தந்த பகுதியில், கிராமத்தில் ஒரு முக்கியஸ்தர்கள் குழு, ஒரு மடம், ஆலய நிர்வாகம் என்பது இருக்கத்தானே செய்தது ?

ஒவ்வொரு ஆலயத்துக்கும் அதற்கென மரபு ரீதியான ஒரு அணுகுமுறை,  ஒரு  பழக்கவழக்கம், ஒரு சம்பிரதாயம் உண்டு. அந்த ஆலயத்துக்கான சம்பிரதாயம் அதற்கே உரித்தான மரபு, வரலாறு , ஊர் வழக்கம் என பலவற்றோடும் தொடர்பு கொண்டு இருக்கிறது. 

தமிழகத்தின் பெரும்பாலான சிவாலயங்கள் ஆகமத்தின் படி அமைக்கப்பட்டவை. அதே போல வைகானஸ பாஞ்சராத்ர ஆகமமே பெரும்பாலான வைணவ ஆலய நடைமுறையை வகுக்கும் அடிப்படை நூற்கள். அதே சமயம் கேரள மாநிலத்தையொட்டி அமைந்துள்ள தமிழக மாவட்ட சிவாலயங்கள், விஷ்ணு ஆலயங்கள் சிலவற்றுக்கு இந்த ஆகமங்கள் பொருந்தாது – அங்கே ஆதிமுதலே கேரள தந்திரம் அடிப்படையாக இருப்பதை காண்கிறோம். (உதாரணம்: கன்யாகுமரி நாகர்கோவில் பகுதியிலுள்ள சில ஆலயங்கள்)

இதுமட்டுமல்ல ! ஒருசில ஆலயங்களுக்கு அந்த ஆலயத்திற்கு மட்டுமே இருக்கக்கூடிய தனிப்பட்ட சடங்குகளும் ஆசாரங்களும் கூட உண்டு. (உதாரணம்: திருச்செந்தூர் ஆலயத்தில் மூலவருக்கு கேரள மரபு போத்திகளும், ஷண்முகருக்கு சிவாசார்யாரும், ஜயந்திநாதருக்கு முக்காணி வகுப்பினரும் பூஜை செய்யும் மரபு)

ஆக, ஆலயங்களை அரசின் பிடியில் இருந்து விடுவித்த பின்னர் அந்தந்த  சம்பிரதாயத்தை நன்கு அறிந்த, அந்தந்த ஆசாரங்களை  கடைபிடிக்கக்  கூடிய மக்களிடமும், பக்தர்களிடமும், சமூகத்திடமும், அவர்களோடு, அந்த  ஆலய அர்ச்சர்களிடமும் கலந்து பேசி இவர்கள் எல்லோரும் சேர்ந்த ஒரு அமைப்பே, ஆலயத்தை நிர்வாகம் செய்ய  வேண்டும்.

இந்த பாரம்பரியமான ஸம்பிரதாயம் என்பது இன்றைய ஹிந்துக்கள்  பலருக்கும் புதிதாக இருக்கும். குடும்ப வேர்களையும் குலதெய்வத்தையுமே  தொலைத்துவிட்ட நமக்கு, ஆலய பாரம்பரியத்தை பற்றி புரிதல் கொஞ்சம்  சிரமம் தான்.

”ஐயனாரைத் தான் ஆடு கும்பிட்டா சைவம் ஆயிட்டாரு தெரிஞ்சுக்கோ” என்று சினிமா பாட்டை கேட்டு தாளம் போடும் மக்களுக்கு, ஐயனார் என்றுமே சைவம் தான் என்றோ, ஐயனாருக்கு எந்தவொரு கோயிலிலும் அசைவ படையலோ பலியோ கிடையாது என்ற அடிப்படையான விஷயம் கூட தெரிய வாய்ப்பில்லை.

(நான் சொல்லவில்லை The Village Gods of South India என்ற நூலில் 1921ல் வெள்ளைக்கார துரை Henry Whitehead சொல்கிறான்)

இப்படி, நம் ஆலயத்தைப் பற்றி நமக்கே சரியான புரிதல் இல்லாமல் செய்ததே அரசியல்வாதிகளின் வெற்றி. இந்த “புலி வந்து விடும்” என்ற மாயையை வைத்து பயமுறுத்தியே ஆலய நிர்வாகத்தை அவர்கள் தங்கள் கட்டுக்குள் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படி சம்பிரதாயத்தைப் பற்றிய அடிப்படை புரிதல் இல்லாத இன்றைய மக்களுக்கு, தங்கள் குடும்ப சம்பிரதாயம் பற்றிய புரிதலே இல்லாத போது, ஆலய சம்பிரதாயம், அதற்கான நிர்வாகம் எல்லாம் எப்படி சரிப்பட்டு வரும் என்று தான் எண்ணத் தோன்றும்.

ஆலய நிர்வாகம் என்ற பெயரில் அரசு அதிகாரிகள் தங்கள் இஷ்டத்துக்கு ஆகமங்களையும் சாஸ்திரங்களையும் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக திருவாரூர் கோவில் உற்சவமும் புறப்பாடும், ஆகமத்தின்படியல்லாமல் ஆட்சியாளர்களின் ஜாதகத்தை அனுசரித்து நடத்திய அவலமெல்லாம் உண்டு. இன்னும் தங்களை முடிசூடா மன்னர்களாகக் கருதிக்கொண்டு, கோவிலில் இருக்கும் இறைவனுக்கு சம்பந்தமே இல்லாத நாட்களில், தங்களுக்கு சாதகமான நாட்களில் கும்பாபிஷேகம் நடத்திய கதைகளும் உண்டு.

இந்த மாதிரியான ஒரு சூழ்நிலையில், நம்முடைய ஆன்மீகப் பெரியோர்கள், ஆச்சாரியர்களுடைய பங்கு முக்கியத்துவம் பெறுகிறது. பல ஆசாரிய  சபைகள், சாதுக்கள், சன்யாசிகள், ஆதீனங்கள், குரு பீடங்கள்  போன்றவர்களின் பங்கு மிக முக்கியமாக அமைகிறது. இவர்களில் பலரது நேரடி கட்டுப்பாட்டில் பல திருக்கோயில்கள் இருந்தும் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு ஆலயத்துக்கும் அதற்கான சம்பிரதாயம் என்ன,  அதற்கான  காரணம் என்ன, கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் என்ன என்பது  குறித்த வழிகாட்டுதலை இந்த ஆசார்ய பீடங்கள் வகுத்து தரமுடியும். இந்த  வழிகாட்டுதலின்படி ஆலய நிர்வாகத்தை நாம் மேம்படுத்திக் கொள்ளவும்  முடியும்.

ஒவ்வொரு ஆச்சாரியரும், குருபீடமும், ஆதீனமும், அர்ச்சகரும் தங்கள்  சம்பிரதாயத்துக்கு உட்பட்ட ஆலயங்களின் வழிபாட்டு முறைகளையும்  சடங்குகளையும் தெளிவுபடுத்தி அதன் சிறப்புகளையும் அதன்  தனித்தன்மையும் நமக்கு வெளிக்கொணர உதவ முடியும்.

இண்டிக் கலெக்டிவ் டிரஸ்டின் தலைவர் திரு டி ஆர் ரமேஷ் அவர்கள் இதற்கான ஒரு வரைவினை தயார் படுத்தி வைத்திருக்கிறார். ஸ்ரீ. தயானந்த சரஸ்வதி ஸ்வாமிகள் அவர்களுடனும், திரு சுப்பிரமணிய சுவாமி  அவர்களுடனும் கலந்து ஆலோசித்து, ஆலய நிர்வாக அமைப்பு பற்றிய ஒரு அடிப்படை வரைவு தயார் படுத்தப்பட்டிருக்கிறது. நீதிமன்றத்தின் துணையுடன் இந்த வகையான ஆலய நிர்வாக வரைவிவுக்கு விரைவில் அங்கீகாரம் பெறும் முயற்சியும் நடைபெற்று வருகிறது.

நிதி முறைகேடு நடைபெறுமா ?

ஆலய நிர்வாகம் மீண்டும் தர்மகர்த்தா முறையில் சென்றால், பண  முறைகேடு ஏற்பட்டுவிடும்  என்ற குற்றச்சாட்டினை முன் வைக்கிறார்கள். 

இதற்கு என்ன பதில் நம்மிடம் இருக்கிறது? இதற்கான பதில் 2014 ஆம்  ஆண்டு, சுப்ரீம் கோர்ட்டால் கொடுக்கப்பட்ட சிதம்பரம் ஆலயத்திற்கான தீர்ப்பில் இருக்கிறது.

இந்த தீர்ப்பின்படி ஒரு ஆலயத்தில் நிதி நிர்வாகத்தில் கோளாறு அல்லது பண மோசடி இருக்குமானால் அதை தகுந்த ஆதாரத்துடன் நிரூபித்து, அப்படி நிரூபிக்கப்பட்டால் அரசாங்கம் அந்த ஆலயத்தின் நிர்வாக அலுவல்களை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு எடுத்து அந்த பொருளாத  சீர்கேட்டை/முறைகேட்டை சரிசெய்து முடியும் வரை ஆலய நிர்வாகம்  செய்யலாம்; அந்த  கால அளவு முடிந்த பிறகு மீண்டும் பழையபடி  நிர்வாகத்திடமே மறுபடியும்  ஒப்படைக்க வேண்டும் என்று அந்த தீர்ப்பு  தெள்ளத் தெளிவாக குறிப்பிடுகிறது.

ஒரு கம்பெனியில் இது போன்று நிதி முறைகேடு நடப்பதாக நிரூபிக்கப்பட்டால் அரசு இதே போல் செய்கிறது. முறைகேடி சரிசெய்யப்பட்டு அரசு விலகிக் கொள்கிறது. ஆனால் ஆலயத்தையோ ஏதேதோ காரணம் கூறி அரசு கபளீகரம் செய்கிறது.

இதிலுள்ள மற்றொரு குற்றச்சாட்டு இந்த நிதி மேலாண்மையில் ஒளிவு மறைவற்ற தன்மை கொண்டு வருவது எப்படி ?

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 25.2. a பிரிவின் படி மத்திய அரசோ  மாநில அரசோ ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் வருமானம் வரும் எல்லா ஆலயங்களுக்குமே, வெளிப்புறத் தணிக்கை (External Audit) செய்யும்படி சட்டம் இயற்ற முடியும்.

இதில் வேடிக்கை என்னவென்றால், இன்று அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் பல கோடி ஆண்டு வருமானம் பெறும் பல கோவில்களுக்கு இந்த  தணிக்கையே நடைபெறுவதில்லை.

உதாரணமாக, ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி கோவில், பழனி – தமிழகத்திலேயே அதிக வருமானம் உள்ள கோயில் அரசாங்கத்தால் நிர்வாகம் செய்யப்பட்டாலும் கூட இன்று வரை அதற்கு தணிக்கையே கிடையாது.

உள்துறை தணிக்கை நடைபெறும் திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி  கோவில் போன்ற கோவில்களில், ஒரு தணிக்கை கூட முறையாக  நடைபெறுவதில்லை. தணிக்கையில் கேட்கப்பட்ட பல கேள்விகள்  இன்றுவரை பதில் அளிக்க படாமலேயே இருக்கிறது.

அரசாங்கம் செய்யும் அரைகுறை தணிக்கைக்கே இந்த நிலைமை என்றால். ஒழுங்கான முறையான தணிக்கை நடைபெற்றால் என்ன நிலைமை  உண்டாகும் என்பது சற்று யோசித்துப் பார்க்கலாம். அரசாங்க நிர்வாகத்தில் இருக்கும் திருக்கோவில் தணிக்கையில் கிட்டத்தட்ட 10 லட்சத்துக்கும்  மேற்பட்ட  கேள்விகளுக்கு பதிலளிக்க படாமல் காத்திருக்கிறது.

அதிக வருமானம் வரும் கோவில்களில் வேண்டுமானால் நிதி மோசடிகள்  நடக்கலாம். ஆனால் வருமானத்திற்கே வழி இல்லாத கோவில்களில் எப்படி  நிதிமோசடி நடக்க முடியும். தமிழகத்தில் இருக்கக்கூடிய சுமார் 35 ஆயிரம்  கோவில்களுக்கு ஆண்டு வருமானம் ரூபாய் பத்தாயிரத்திற்கும் குறைவு.  அதாவது ஒரு நாள் வருமானம் என்பது வெறும் 28 லிருந்து 30 ரூபாய் மட்டுமே. இந்த 28 ரூபாயில் என்ன மோசடி நடந்து விட முடியும்?

ஜாதிப் பாகுபாடு உண்டாகுமா ?

அடுத்து முக்கியமான குற்றச்சாட்டு, ஆலய நிர்வாகம் அரசாங்கம்  கைதிலிருந்து நீங்கிவிட்டால் ஆலயங்களில் ஜாதி அடிப்படையிலான வேறுபாடு உள்ளே புகுந்து விடும் என்பது.

இந்த காரணத்துக்காகத்தான் அரசாங்கம் கோவிலை வலுக்கட்டாயமாக  இந்துக்களிடம் இருந்து பிடுங்கி எடுத்து நடத்துகிறது என்றால் அது இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு  எதிரானது.

இந்துக்கள் அவர்களுடைய ஆலயங்களை நிர்வாகிக்க எல்லா உரிமையும்  பெற்றவர்கள். நாம் நம்முடைய ஆலயங்களை நிர்வாகப்பது நம் அடிப்படை உரிமை. அரசாங்கம் அதனை நம்மிடமிருந்து பறிக்கிறது.

இந்திய அரசியலமைப்பு சட்டம் 25.2.b பிரிவு சொல்வது, ”மக்களுக்கான  வாழ்வியல் நன்மைகளையும் கருதி ஹிந்து ஆலயங்கள் எல்லா தரப்பு  மக்களுக்காகவும் திறந்து விடப்பட வேண்டும்”

ஆர்டிகல் 25  என்பது Fundamental Right –  அடிப்படை உரிமை. ஆக அப்படி ஒரு வேளை ஒரு ஆலயத்தின் நிர்வாகிகளோ அல்லது அர்ச்சகரோ ஒரு தனிப்பட்ட பக்தரிடம் பாகுபாடு காட்டினால், தாராளமாக அவர்மேல்காவல் துறையில்  புகார் செய்து எப்ஐஆர் பதிவு செய்யலாம்.

இதுபோன்று எந்தவிதமான பிரச்சினையும் பாகுபாடும் இல்லாமல்  தனியாரால் நடத்தப்படும் ஆயிரக்கணக்கான கோவில்கள் ஏற்கனவே நம்  நாட்டில் இருக்கிறது.  அதனால் முழுக்க முழுக்க தீய எண்ணத்துடன் இல்லாத ஒரு பிரச்சினை காட்டி, ”பூதம் வருகிறது” என்பது போல் பயங்காட்டி, அரசாங்கமே செய்யும் ஒரு மோசடி

ஆனால் நடைமுறையில் நடப்பதென்ன ?

இன்னும் சொல்லப்போனால் இந்த அரசாங்கம்தான் ஆலயத்தில் சிறப்பு  கட்டணம். சிறப்பு நுழைவு தரிசனம் என்று பலவிதமான விஷயங்களை  உட்புகுத்தி பாகுபாட்டை உருவாக்கியிருக்கிறது.

அரசாங்கம் ஆலயத்தின் நிர்வகிக்கக் கூடாது என்பதற்கு இந்த ஒரு காரணமே  போதும். கடவுளை காட்சி பொருளாக்கி, எக்ஸிபிஷன் போல, ஸ்பெஷல்  தரிசன டிக்கெட், விஐபி தரிசன டிக்கெட் என்று திருவண்ணாமலை ஸ்ரீவில்லிபுத்தூர் போன்ற பல கோவில்களில் அர்ச்சனை டிக்கெட் உடன்  சேர்த்து இதுபோல பல ஸ்பெஷல் டிக்கெட்டுகளை விற்பனை செய்து  பொருளாதார ரீதியாக அரசாங்கம் மக்களுக்குள் பாகுபாட்டை காட்டுகிறது. 

காசு கொடுத்து டிக்கெட் வாங்க முடியாதவர்களுக்கு இறைவன்  தொலைவில்தான் தரிசனம் கொடுப்பார். உதாரணமாக திருப்பரங்குன்றம் ஆலயத்தில் டிக்கெட் எடுக்காமல் வெளியே இருந்து தரிசனம் செய்பவர்களுக்கு உள்ளே இருக்கும் சிவபெருமானை தரிசனம் செய்யவே முடியாது.

ஒரு ஏழை பக்தன் திருப்பதி பாலாஜி தரிசனம் செய்ய வேண்டுமென்றால்  அவனுக்கு இரண்டு  நாட்கள் கூட ஆகும். இரண்டு நாட்கள்  காத்திருந்தவனக்கு கிடைக்கும்  தரிசனம் ஒரே ஒரு வினாடி தான்.  ஏனென்றால் அவனால்  ஸ்பெஷல் தரிசனத்திற்கு காசு கொடுத்து டிக்கெட்  வாங்க முடியாது. அதே சமயம் ஒரு விஐபி பணம் கொடுத்து ஸ்பெஷல்  டிக்கெட் வாங்கினால்  இறைவனுக்கு  மிக அருகில் – மற்ற பக்தர்கள்  செல்ல முடியாத அளவுக்கு அருகில் சென்று கிட்டத்தட்ட 30-40 நிமிடங்கள்  நிறுத்தி வைக்கப்பட்டு  அங்கு தரிசனம் கிடைக்கிறது. எவ்வளவு பணம்  கொடுக்கிறதோ அவ்வளவு நேரமும் கிடைக்கிறது.

இது அரசாங்க நிர்வாகத்தால் வரும் சீர்கேடு என்பதை உணராத நம்மில் பலரும், “மற்ற மதங்களில் இப்படி இருக்கிறதா? ஹிந்து கோவில்களில் மட்டும் காசு இருந்தால் தான் கடவுள் அருகே செல்ல முடியும்” என்று ஆலயம் என்ற அமைப்பின் மேலேயே தவறான ஓர் அபிப்ராயமும் உருவாகி விடுகிறது.

இது எல்லாம் கொண்டு வந்தது யார் ? அரசாங்கம்தான் !

ஹிந்துக்கள் தங்கள் அடிப்படை உரிமையான, தங்கள் ஆலயத்தை தாங்களே  நிர்வாகம் செய்யும் உரிமை கூட அரசாங்கத்தால் மறுக்கப்பட்டு, பலவந்தமாக இந்துக்களுடைய கோயில்கள் கைப்பற்ற படுகிறது!

அரசாங்கத்தின் ஒரே நோக்கம் ஆலய நிர்வாகம் அல்ல !  ஆலயத்தின் பூஜைகள் அல்ல ! ஆலயத்தின் ஆசாரங்கள் அல்ல  ! ஆலயத்தின் சம்பிரதாயங்கள் அல்ல !

அதன் நோக்கமெல்லாம் ஆலயத்தில் இருந்து கிடைக்கக்கூடிய வருமானம்  தான் ! உண்டியலில் போடும் பணம் இறைவனுக்கான காணிக்கை என்று எண்ணியே பக்தன் போடுகிறான். ஆனால் நடப்பதென்ன? அந்தப்பணம் அரசாங்கத்தின் செலவுகளுக்குத் தான் பயன்படுகிறது !

ஆலயத்தை ஒரு கமர்சியல் காம்ப்ளக்ஸ் ஆக மாற்றி, அதன் மூலம்  எப்படியெல்லாம் வருமானத்தைப் பெருக்கலாம் என்று மட்டுமே அரசாங்கம்  யோசிக்கிறது. ஆலயத்துக்குள் கடைகளை கட்டி உள்வாடகைக்கு விடுகிறது! பூஜை நிற்கக் கூடாது என்று வழங்கப்பட்ட மானிய நிலங்களை தாரை வார்த்து ஒரு வேளை பூஜைக்கும் வழி இல்லாமல் செய்கிறது !

அதனால் மக்கள் இனிமேல், ”அரசாங்கம் நிர்வாகம் செய்யாவிட்டால்  ஆலயத்தினை எப்படி நிர்வாகம் செய்ய முடியும்?” என்று கேள்வி  கேட்காதீர்கள் !  

“நாம் நிர்வாகம் செய்ய வேண்டிய ஆலயத்தை அரசாங்கம் ஏன் நிர்வாகம்  செய்கிறது” என்று கேளுங்கள்.

Aravind Subramanyam V

Shri. Aravind Subramanyam, or “Sastha Aravind” as he is called fondly, is the great-grandson of Shri C V Srinivasa Iyer (Chaami Anna) who started the Panguni Uthram Festival at Sabarimala - thus tracing a century-old connection with the Sabarimala temple. He has done his research on Sastha worship for the past 24 years and has penned around 10 books about Lord Sastha. His magnum opus Shri Maha Sastha Vijayam (Complete Purana on Lord Sastha) is worth mentioning - a massive book of 500 pages. He has published research articles and books in the field of education and religion. He has also published articles and lectured extensively on Topics of Indian Heritage, Puranas and Devi Worship.

0 Reviews

Related post