மனு தர்மம்

 மனு தர்மம்

மனுதர்மத்தைப் பற்றி பல்வேறு சர்ச்சைகள் கிளப்பிவிடப்பட்டுள்ள நிலையில், சில அடிப்படை விஷயங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும்

மனு தர்மம் எழுதியது யார்? எந்த காலத்தில் எழுதப்பட்டது

மனு தர்மம் அல்லது மனு ஸ்ம்ருதி என்ற புத்தகத்தை எழுதியவர் மனு எனப்படும் அரசர். இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், மனு என்பவர் ஒரு நபர் கிடையாது. மன்வந்தரம் என்பது பலவிதமான காலகட்டங்கள். ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஒவ்வொரு மனு தலைவராக இருந்து இந்த உலகை ஆட்சி செய்வார் என்ற வழக்கம் உள்ளது. அதில் 14 விதமான மன்வந்தரங்கள் சொல்லப்படுகிறது.

இப்போது வைவஸ்வத மன்வந்தரம் என்று சொல்லக்கூடிய வைவஸ்வத மனு என்பவருடைய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். ஆறு மனுக்கள் கடந்து இப்போது இந்த ஏழாவது மனுவின் காலத்தில் உள்ளோம். மனு என்பவர் அந்தந்த காலகட்டத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கக்கூடியவர். அவரால் மக்களுக்கான நெறிமுறைகள் வழிகாட்டுதலுக்காக உருவாக்கப்பட்டதே மனு தர்மம் எனும் நூல்.

இது பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன் எழுதப்பட்டது. இதற்கான ஆதாரம் என்பது, வழிவழியாக அந்த நூல்கள் கிடைக்ககூடிய ஓலைச்சுவடிகளிலும், பலவிதமான கிரந்த சாலைகளிலும் கிடைக்கக் கூடியது தான். இப்போது ராமாயணம், மஹாபாரதம் எல்லாம் எங்கிருந்து கிடைத்ததோ அவ்வாறே தான் எந்த நூலுமே நமக்குக் கிடைக்கிறது. காலங்காலமாக அரிய நூல்கள் பலதும், பல படையெடுப்பின் காரணமாக அழிந்துவிட்டன. படையெடுப்பின் முதல் நோக்கம் பண்பாட்டினை அழிப்பது. அதற்கன முதல்படி நூல்களை அழிப்பது. அதனால் பல நூல்கள் காணாமல் போனது. இந்த காரணத்தால் தான் பல நூல்கள் இன்றைக்குமே முழுமையாக கிடைக்காததற்கு காரணம். இது எல்லாமே ஒலைக்கட்டுகளிலும், சுவடிகளிலும் இருந்ததை இந்த அளவிற்கு காப்பாற்றப்பட்டு, எவ்வாறு திரு உ. வே. சாமிநாதய்யர் தமிழ் சுவடிகளைத் தேடி எடுத்தாரோ அது போல பல தர்ம சாஸ்திரங்களும் புராணங்களும் பாரத பூமி முழுவதிலும் இன்றும் கிடைக்காமல் பல இடங்களில் இருக்கிறது. தேடினால் பல பொக்கிஷங்கள் கிடைக்கத்தான் போகிறது. வரும் காலங்களில் கிடைக்கவும் செய்யும். அப்படி காலம் காலமாக பாதுகாக்கப்பட்டு வந்த பல நூல்களில் ஒன்று மனுஸ்ம்ருதி.

பாகவத புராணம், பதிணென் புராணங்களில் ஒன்று. அந்த வடமொழி புராணத்தில் சொல்லும்போது, ஒரு மனுவைப் பற்றி சொல்லியிருக்கிறது. அந்த மனுவைப் பற்றி சொல்லும் போது, மனுவை ‘த்ராவிடேஸ்வர:’, அதாவது தென்னாட்டை ஆண்டு கொண்டிருந்தவர் என்று சொல்கிறது. தென்னாட்டை ஆண்டு கொண்டிருந்த மன்னன் வைகை நதிக்கரையோரத்தில் இருந்தார் என்ற குறிப்புகளையும் நாம் காண்கிறோம். இப்போது போலியாக சொல்லப்படும் ஆரிய-திராவிடப் பிரிவினைகள் எதுவுமே அந்தகாலத்தில் இல்லை என்பதற்கு இது மற்றொரு ஒரு சாட்சி. இது போன்று மற்றைய நூல்களில் கிடைக்கும் குறிப்புகளும், மனு என்பவரைக் குறித்த புரிதலை நமக்குத் தருகிறது. 

மனு தர்மம் மன்னர் ஆட்சி காலம் வரை முறையாகவே பின்பற்றப்பட்டது. தமிழ்நாடே ஒரு காலகட்டத்தில், சேர, சோழ, பாண்டிய, பல்லவ என்று நான்கு தேசங்களாக இருந்தது. இன்று தான் தமிழ்நாடு என்று நாம் ஒன்றாக சொல்கிறோம். பண்டைய தமிழகம் என்பது கேரளத்தையும் சேர்ந்தது. ‘வடவேங்கடம் முதல் தென்குமரி வரை’ என்கிறோம். திருப்பதி மலையும் நம்முடன் தான் இருந்தது. தமிழ்நாடே ஒரு நாடு கிடையாது. பல ஆட்சியாளர்கள் பல தேசங்களாக பிரிந்து தான் ஆட்சி இருந்தது. தமிழகத்தில் மனுநீதிச் சோழன் என்ற வரலாற்றினை படிக்கிறோம். மனுஸ்ம்ருதியின் வழி நின்று நீதி பரிபாலனம் செய்து ஆட்சி நடத்திய காரணத்தால் தான் அவனுக்கு “மனுநீதிச் சோழன்” என்றே பெயர் உண்டானது. இப்படி பாரம்பரியமான மன்னர்கள் ஆட்சி காலம் வரை நடைமுறையில் இருந்த விஷயம். அதற்கு பிறகு மன்னர் ஆட்சி மாறி அடுத்த ஆட்சி வரும்போதும், அது கொஞ்சம் கொஞ்சமாக காலமாற்றம், மக்களுடைய செயல்பாடுகள், நம்பிக்கைகள், நடைமுறைகளில் மாற்றம் ஏற்படும்போது தர்மசாஸ்திரங்களை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்ட போது மாறியது. இதனால் நாம் மனுஸ்ம்ருதியை சரியாக புரிந்து கொள்ளாமல் பலரது திரிக்கப்பட்ட வாதங்களை இன்று கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

நம்முடைய மூல நூல்களை முறையாக நாம் படிக்காத காரணத்தால் தான், இந்த ஆங்கிலேயருடைய மொழிபெயர்ப்பை அண்டி இருக்க வேண்டிய நிலைமை நமக்கு வந்திருக்கிறது. மனு தர்மம் மட்டும் அல்ல. எல்லா நூல்களுமே நமக்கு மூல நூல்களிலிருந்து தமிழுக்கு பல பண்டிதர்கள் மொழி பெயர்த்துள்ளனர். ஆனால் நாம் அதை சரியாகப் படிக்காமல் இருந்து விட்டோம். நம் நெறிமுறைகளைப் படிப்பதும், நம் தர்மத்தின்படி வாழ்வதும் ஏதோ கேலிக்குரிய செயலாக திட்டமிடப்பட்டு நம் மனதுக்குள் புகுத்தப்படுகிறது என்றே கூறலாம்.

நம்முடைய வேதங்களுடைய பெருமையோ, நம்முடைய கலாசாரத்தினுடைய பெருமையோ, நம்முடைய முன்னோர்கள் சொன்னால் நாம் கேட்கமாட்டோம். மாக்ஸ் முல்லர் முதலான அயல்நாட்டு அறிஞர்கள் வந்து சொன்னால் நாம் இதை ஏற்றுக்கொள்வோம் என்ற பாணியில் சொல்வோம். 

அப்படித்தான், மனு தர்மத்தை ஆங்கிலேயர்களும் மேலை நாட்டவர்களும் படித்து, இது மிக அருமையான நூல் என்று சொல்லி மொழி பெயர்த்ததை நாம் பார்க்கிறோம். ஜெர்மானிய தத்துவ மேதை ஆகிய நீட்ஷே என்ன சொல்கிறார் எனில், “பைபிளை மூடுங்கள். மனு தர்மத்தைப் படியுங்கள்”, என்கிறார்.  ஆனால் அதற்கு முன்னமேயே பல மொழிகளில் மொழி பெயர்ப்பு உள்ளது. 1890களில் வந்த மனுநீதியின் மொழி பெயர்ப்பு தமிழிலேயே உள்ளது. அதைப்பற்றி யாருக்கும் தெரியவில்லை. 

மூல நூலைப் படித்தால் என்ன அர்த்தம் வருமோ, மொழிபெயர்ப்பில் கட்டாயம் அது மாறுதலை அடையும். நம்முடைய தமிழ் மொழியிலேயே இருக்கும் திருக்குறளை, ஆங்கிலத்தில் படித்துப்பார்த்தால், அந்த மொழிபெயர்ப்பில் என்னவெல்லாம் மாறுதல்கள் இருக்கின்றன என்பது புரியும். அப்படிபார்க்கும் போது ஆங்கிலேயர்கள் தான் கொடுத்தார்கள் என்று இல்லை. அதற்கு முன்னமேயே மனுநீதி இருந்தது. அதனுடைய புரிதல் சரியாக இல்லாததனால், நாம் மூல நூலைப் படிக்காததனால் ஆங்கிலேயர்கள் அவர்கள் புரிந்து கொண்டதைக் கொண்டு எழுதிய  மொழிபெயர்ப்பை வைத்து தப்பும் தவறுமாக படித்து கொண்டிருக்கிறோம்.

பெண்களை படிக்க வைப்பது தவறு. சொத்துரிமை வழங்க கூடாது என்று மனுதர்மம் ஒரு புரட்டு ஓடுகிறது

மனு தர்மத்தை முதலில் அணுகுவதற்கு முன்னர் அந்த காலகட்டம் எப்படி இருந்தது என்பதை புரிந்து கொண்டு அணுக வேண்டும். அன்றைய சமூகம் வேறு. இன்று நாம் பார்க்கக் கூடிய நம்முடைய சமூகம், அதனுடைய பார்வை வேறு. அப்படி இருந்தாலும், நாம் என்னவோ மனு தர்மம் பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தது என்றோ, அவர்களுக்கு உரிமை மறுக்கப்பட்டிருந்தது போன்ற தோற்றம் மக்களிடம் கொடுக்கப்படுகிறது. அது தவறு.

ஏனென்றால், மனு தர்மத்தில் 9வது அத்தியாயம், அது தான் பலரும் மேற்கோள் காட்டும் அத்தியாயமாக உள்ளது. ஆண்களுக்கும் பெண்களுக்குமான வாழ்வியல் நெறிமுறைகளை சொல்லக்கூடிய அத்தியாயமாக 9வது அத்தியாயம் இருக்கிறது. அதில் பொருளாதாரத்திற்கு பெண்களுக்கு உரிமை உண்டு என்று சொல்லப்படுகிறது. வீட்டினுடைய பொருளாதாராம், தூய்மை, திருமணங்கள் முதலான எல்லா விஷயங்களிலும் பெண்களுடைய கருத்து முக்கியம் என்று சொல்லி 9வது அத்தியாயம் 11வது ச்லோகத்தில் மனு மிகத் தெளிவாக சொல்கிறார்.

அர்த்தஸ்ய ஸங்க்ரஹே சைனாம் வ்யயே சைவ நியோஜயேத்

சௌசே தர்மே அன்னபக்த்யாம் பாரிணாஹ்யஸ்ய சேக்ஷணே

 வீட்டின் பொருளாதாரம், தூய்மை, சுகாதாரம், வீட்டில் நடக்கும் வழிபாடுகள், உண்ணும் உணவு ஆகிய விஷயங்களில் பெண்கள் முழு சுதந்திரத்துடன் செயல்பட வேண்டும்.

அடுத்தது சொத்துக்கு உரிமை. கட்டாயம் பெண்களுக்கும் சொத்தில் உரிமை உண்டு என்று அதே 9வது அத்தியாயம் 130வது ச்லோகத்தில் மனு சொல்கிறார். அதாவது,

யதைவாத்மா தத புத்ர புத்ரேண துஹிதா ஸமா

தஸ்யாம் ஆத்மனி திஷ்டந்த்யாம் கதம் அன்யோ தனம் ஹரேத்

மகனுக்கு நிகராக மகளையும் கருத வேண்டும். தன்னுடைய உதரத்திலிருந்து உதித்த பெண் இருக்கும்போது வேறு ஒருவனுக்கு சொத்தை எப்படி கொடுப்பது?”, எனும் கேள்வியை மனு நமக்கு முன்னே வைக்கிறார்.

அப்படி இருக்கும்போது, “மனு நமக்கு சொத்தில் பங்கு கொடுக்கவில்லை, பெண்களை அடிமைபடுத்தி வைத்திருந்தார், உரிமைகளை வழங்கவில்லை”, என்பது ஒரு தவறான புரிதல்.

திருமண விவாகரத்து பற்றி சொல்லவில்லை! அதனால் பெண் சுதந்திரத்தை அந்த நூல் மறுக்கிறது என்கிறார்கள் !

விவாகரத்து செய்யக்கூடாது என்பதை எந்த பழைய நூலுமே சொல்லாது !  மனு தர்மம் மட்டும் அல்ல. நம்முடைய தர்ம சாஸ்திர நூல் எதுவுமே கணவன் மனைவி இணைந்து தான் வாழ வேண்டும் என்று சொல்கிறது. இது தர்ம சாஸ்திரம் அடிப்படையாக சொல்லக்கூடிய விஷயம். இந்த சாஸ்திர நூல்கள் அனைத்துமே, நம்முடைய மனித வாழ்வு என்பது எதை நோக்கி பயணப்படுகிறது என்பதைத்தான் இலட்சியமாக வைத்திருக்கிறது. 

சாஸ்திர நூல்கள் படி பார்க்கும்போது மனு தர்மம் மட்டும் இல்லாமல், விவாஹ மந்திரங்களைப் (அதாவது கல்யாணத்தில் சொல்லக்கூடிய மந்திரங்கள்) பார்த்தாலே, “நாம் 100 ஆண்டு காலம் இணைந்து வாழ வேண்டும். நம்மால் நம் சந்ததிகள் நல்லவிதமாக உருவாகி, அவர்கள் சமூகத்திற்கு பயனுள்ள ஒரு சந்ததியாக உருவாக வேண்டும்”, என்பதைத் தான் இந்த மந்திரங்களோ, சடங்குகளோ, விஷயங்களோ சொல்கிறது. அதில் விவாகரத்து என்ற விஷயமே இல்லை. இன்று சட்டத்தில், நாம் ஒரு புதிய சட்டம் ஒன்று உருவாக்கி, ஆங்கிலேயர்களுடைய தாக்கத்தினால் உருவாக்கப்பட்ட சட்டத்தை வைத்து பழைய நூல்களை பார்க்கும்போது இவை விநோதமாகத் தெரிகிறது. இது நம் பார்வையின் குற்றம் ! நூலின் குற்றமல்ல ! திருக்குறளில் கூடத்தான் விவாகரத்தைப்பற்றி பேசவில்லை. தமிழ்மறை மற்றும் நீதி நூல்கள், நன்னூல் முதலானவைகளில் கூட விவாகரத்தைப்பற்றி பேசப்படவில்லை. அப்படி இருக்கும்போது, அன்றைய வாழ்வியல் முறையில் விவாகரத்து என்பது அவசியமில்லாத விஷயமாக இருந்தது. அன்றைய நடைமுறையை இன்றைய சட்டத்துடன் பொருத்திப் பார்க்கும்போது கண்டிப்பாக குழப்பம் தான் வரும். 

அன்று இருந்த சமூக சூழ்நிலைகளை அனுசரித்து சில விஷயங்களை நாம் இன்று பார்க்கும் போது, சில விஷயங்கள் இன்றைய காலகட்டத்துக்கு மாறுதலாக இருக்கும். ஒரு நூலை அணுகும் போது அந்த நூல் எந்த காலகட்டத்தில் பழக்கத்தில் இருந்தது, அந்த நூல் எப்போது உருவானது, அன்றைய வாழ்வியல் எப்படி இருந்தது முதலான பார்வைகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டும்.

ஊர்த்வம் து காலாத் ஏதஸ்மாத் விந்தேத ஸத்ருசம் பதிம் 

– (மனு ஸ்ம்ருதி 9-90)

வயது வந்த பெண், தனது கணவனைத் தானே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்

என்று பெண்ணுக்கு உரிமையைத் தரும் மனு தர்மம் விவாகரத்தைப்பற்றி பேசவில்லையா? என்றால், கட்டாயம் பேசாது. ஏனென்றால், அன்றைய வாழ்வியல் நெறிமுறையில், கணவன் மனைவி இணைந்து தான் வாழ வேண்டும் என்ற ஒரு நெறிமுறை இருந்தது.

சுதந்திரமாக வாழ பெண்களுக்கு உரிமை இல்லை என மனு சொல்கிறார் என்று கூறுகிறார்கள்

இது திரும்பவும், முக்கியமான ச்லோகத்தை வைத்துதான் இவர்கள் பேசுகிறார்கள். அந்த ச்லோகத்தை முதலில் பார்ப்போம் 

பிதா ரக்ஷதி கௌமாரே பர்த்தா ரக்ஷதி யௌவனே

ரக்ஷந்தி ஸ்தவிரே புத்ரா ஸ்த்ரீ விவிக்தம் அர்ஹதி

– (மனு ஸ்மிருதி 9-3)

இளம் பிராயத்தில் பெண்ணைப் பாதுகாக்க வேண்டியது தந்தையுடைய கடமை. வளர்ந்த பிறகு, யௌவன பிராயத்தில் அவளைக் காக்க வேண்டியது கணவனின் கடமை. வயதான காலத்தில் அவளைக் காக்க வேண்டியது மகனுடைய கடமை. பெண்கள் எல்லா காலத்திலும் தனித்து விடாமல் காக்கப்பட வேண்டியவர்கள் 

இதைத்தான் திரித்து, “பெண்களுக்கு சுதந்திரம் இல்லை. என்றைக்குமே அவர்கள் ஆணை அண்டிதான் வாழ வேண்டிய வாழ்க்கையை உடையவர்கள்” என்று மனு சொன்னதாக திரித்து சொல்லப்படுகிறது. ஏற்கனவே பலமுறை கூறியது போல, மூல நூல்களைப் படித்தால் மட்டுமே அதில் என்ன சொல்லப்படுகிறது என்பது நமக்கு தெளிவாகப் புரியும். அது மட்டுமல்லாமல், ஒரு ச்லோகத்தை தனியாக எடுத்துப் பார்த்தால் அர்த்தம் விபரீதமாகத் தான் இருக்கும். 

உதாரணமாக பகவத் கீதையில் ஒரு ச்லோகம் இருக்கிறது : “மாம் அனுஸ்மர யுத்ய ச” என்று கண்ணன் சொல்லும் அந்த வரியின் பொருள், “என்னை மனதில் எண்ணிக் கொண்டு, துணிந்து போர் செய்” – இதை மட்டும் எடுத்துக் கொண்டு, கண்ணன் தன்னை எண்ணாதவர் எல்லோரையும் கொல்லச் சொல்கிறான் என்றால் அது எவ்வளவு பெரிய அபத்தம் ? பகவத் கீதை சொல்லப்பட்ட காலம், இடம், சூழ்நிலையில் அர்ஜுனனின் மனச்சோர்வை நீக்கி உனக்கான கடமையில் பின் வாங்காதே என்று அதனை பொருள் கொள்ளுதல் வேண்டும். அது கீதையை முழுதும் படித்தாலே விளங்கும். அதுபோலத் தான் மனுஸ்ம்ருதியையும், அங்கொன்றும் இங்கொன்றுமாக எடுத்துப் பார்த்தால் தப்பும் தவறும் தான் தெரியும். 

மனுஸ்ம்ருதி ஆண்களுக்கும் பெண்களுக்குமான கடமைகளைச் சொல்லும் போது, 

“பெண் என்பவள் ஒரு விலை மதிப்பில்லாத ஒரு ரத்தினம் போன்றவள்”, என்று கூறுகிறார் மனு. அந்த ரத்தினதை எப்படி நாம் பாதுகாத்து வைக்க வேண்டுமோ அதுபோல, ஆண் ஒவ்வொரு காலகட்டத்திலேயும் பெண்ணைக் காக்க வேண்டியவன் ஆகிறான் என்று ஆணின் கடமையை அந்த நூல் சொல்கிறது. 

விஷ() பிரச்சாரம்

உண்மை இப்படி இருக்க, பெண்களை இழிவுபடுத்தும் விதமாக மனு தர்மத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது என்று திட்டமிட்டு விஷப் பிரச்சாரம் செய்கிறார்கள். அப்படி எதுவுமே மனு தர்ம சாஸ்திரத்தில் கிடையாது என்பது தான் சத்தியம். பெண்களை மிகவும் உயர்வாகப் போற்றி தான் மனு தர்ம சாஸ்திரம் சொல்கிறது. எங்கேயுமே கற்பு பிறழ்ன்றவர்களாக சித்தரிக்கப்படவில்லை. இது தெளிவான ஒரு விஷயம். ஏனென்றால், நடுவிலிருந்து ஒரு ச்லோகத்தை எடுத்துப்பார்த்தால் கட்டாயம் அப்படி தப்பாகத்தான் தெரியும்.

உதாரணத்திற்கு, இவர்கள் எந்த ச்லோகத்தை சொல்கிறார்கள் என்பதையே சொல்கிறேன். அதை வைத்தே விளக்குகிறேன். 

ஏவா ரூபம் பரிக்ஷந்தே அஸாம் வயஸி ஸம்ஸ்திதி:

ஸுரூபம் வா விரூபம் வா புமான் இத்யேவ புஞ்சதே (9.14)

ஒரு பெண்ணுக்கு ஓர் ஆண் மேல் விருப்பம் உண்டாக, வயதோ, அழகோ, தோற்றப்ப்பொலிவோ காரணமென்று சொல்ல முடியவில்லை. அழகனானாலும், அழகற்றவனானாலும் ஆண் என்பவன் மேல் பெண்ணுக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது.

இதைப் பொத்தாம் பொதுவாகப் பார்த்தால் தவறாகவே தெரியும். ஒரு பெண்ணைப் பெற்ற தகப்பனின் பார்வையில் பார்த்தால் இதன் அர்த்தம் விளங்கும். இது இன்றளவும் நடைமுறையில் இருப்பதால் தானே, பெண்ணுக்கு திருமணம் செய்யுமுன்னர் பலமுறை விசாரிக்கிறோம் ? பெண் கண்மூடித்தனமாக ஒருவன் மேல் காதல் கொள்வதும் பின்னர் விபரீதங்களைச் சந்திப்பதும் நடக்காத ஒன்றில்லையே?

ஏற்கனவே ஒரு ச்லோகம் சொல்லப்பட்டது. பிதா ரக்ஷதி கௌமாரே  என்று.. பெண்கள் ஆணை சார்ந்திருக்க வேண்டும் என்று. அது ஆண்களுக்காக சொல்லப்பட்டது. ஆண்கள் பெண்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக சொல்லப்பட்ட நீதி.

அதேபோல, திருவள்ளுவர் ஒரு கருத்தை சொல்கிறார். 

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற

சொற்காத்துச் சோர்விலாள் பெண் 

கற்புநெறியில் தன்னையும் காத்துக் கொண்டு, தன் கணவனையும் காப்பாற்றித் தகுதியமைந்த புகழையும் காத்து, உறுதி தளராமல் வாழ்கின்றவளே பெண் எனக் கூறப்பட்டுள்ளது.

அதையே தான் மனுவும் சொல்கிறார். “ஒரு பெண்ணினுடைய பாதுகாப்பு என்பது முதலில் அவளிடமிருந்து துவங்குகிறது” என்கிறார். இதை வைத்து அவர் பெண்ணை கேவலமாக சித்தரித்திருக்கிறார் என்று அர்த்தம் கிடையாது. ஒரு பெண்ணை பாதுகாக்க வேண்டும் என்றால் அதற்கு முதலில் அவளுடைய ஒத்துழைப்பு மிகவும் அவசியம். அவள் தன்னை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று தீர்மானித்து விட்டால், அதற்கு கூடுதலான பாதுகாப்புகள் இருக்க முடியுமே தவிர வேறு யாரும் அவளை கட்டுப்படுத்த முடியாது என்றே மனு சொல்கிறார். இது எல்லாவற்றுக்குமே பொருந்தும். பெண் என்பவள் சக்தி ஸ்வரூபம். பஞ்சபூதங்களுமே சக்தி ஸ்வரூபம் தான். நெருப்போ, நீரோ, காற்றோ எதுவானாலும், அது தாண்ட வேண்டும் என்று நினைத்தால் நம் யாராலும் தடுக்க முடியாது. இது தவிர்க்க முடியாத உண்மை. சுனாமி, சூறாவளி, நெருப்பு முதலானவைகள் அது எல்லை மீற வேண்டும் என்று தீர்மானித்து விட்டால் அதை யாருமே தடுக்க முடியாது. அது கட்டுக்குள் இருக்கும் வரை தான் நமக்கும் நல்லது அதற்கும் நல்லது. பெண்ணை அப்படி சக்தி வடிவமாக மனு உருவகப்படுத்துகிறார். அப்போது நாம் என்னதான் பாதுகாக்க வேண்டும் என்று நினைத்தாலும், பெண் அவளே தன் பாதுகாப்பிற்கு முதல் படி எடுத்துவைக்க வேண்டும் என்று ஒரு விஷயம் சொல்கிறார். இது தான் திரித்து சொல்லப்படுகிறது. இதற்கு முன்னும் பின்னும் பார்த்தால் புரிந்து விடும். 

அவர் என்ன சொல்கிறார் எனில்,

யத்ர நார்யாஸ்து பூஜ்யந்தே ரமந்தே தத்ர தேவதா

அர்த்தம் : பெண்கள் எந்த இடங்களில் பூஜிக்கப்படுகின்றார்களோ, அந்த இடத்தில் தெய்வம் சந்தோஷமாகி அவர்களுக்கு அருளை வாரி வழங்கும்.

இது ஒரு முக்கியமான ஒரு வாக்கியம். பெண்களை தெய்வத்திற்குச் சமமாகச் சொல்கிறார். அதே ச்லோகத்தில் அடுத்த வரி,

யத்ரைதாஸ்து பூஜ்யந்தே ஸர்வாஸ்தத்ர அபலா க்ரியா 

– (மனு ஸ்மிருதி 3-56)

எங்கே பெண்கள் பூஜிக்கப்படவில்லையோ அவர்களுக்கு தெய்வ சக்தி குன்றி எல்லாவிதமான அழிவும் ஏற்படும் என்று கூறுகிறார்

ஜாமயோ யானி கேஹானி சபந்தி அப்ரதிபூஜிதா

தானி க்ருத்யாஹதானீவ வினச்யதி ஸமந்தத

– (மனு ஸ்ம்ருதி 3-58)

 எந்தெந்த இடங்களில் பெண்கள் தகாத, அறுவறுக்கத்தக்க வார்த்தைகளால் இகழப்பட்டு, அவமானப் படுத்தப் படுகிறார்களோ, அந்த இடமே விஷம் உண்டவன் அழிவது போல் அழிந்து போகும்.

எவன் தன் வாழ்க்கையில் சந்தோஷம் வேண்டும் என்று ஆசைப்படுகிறானோ அவன் தன் உடன் பிறந்த சகோதரியை, தன்னுடைய மகளை, தன்னுடைய மனைவியை சந்தோஷமாக வைத்துக்கோள்ள வேண்டும்.

“பெண்களுடைய மனம் சந்தோஷப்பட்டால் உன் வாழ்வில் நலம் ஏற்படும். பெண்களுடைய மனம் வருத்தத்தை அடைந்தால் உனது வாழ்வில் நாசம் உண்டாகும்”, என்று மனு சொல்கிறார். இதில் எங்கே பெண்கள் குறைவாகவோ தாழ்வாகவோ சித்தரிக்கப்படுகிறார்கள் ?

பித்ருபிர் ப்ராத்ருபிச் சைதை பதிபிர் தேவரைஸ் ததா

பூஜ்யா பூஷயிதவ்யாச்ச பஹு கல்யாணம் ஈப்ஸுபி

– (மனு ஸ்மிருதி 3-55)

உன்னுடைய வீட்டில் இருக்கக்கூடிய உன்னுடைய மகளையோ, சகோதரியையோ, அண்ணியையோ, உன்னுடைய மனைவியையோ நீ போற்றி கௌரவித்தால் மட்டுமே நீ நலமாக வாழ முடியும் 

மனு தெளிவாக சொல்கிறார். இதைக் காட்டிலும் எப்படி பெண்களுடைய குண நலன்களை நாம் விளக்க முடியும்? 

இதே போல தான் பெண்களும் கணவனை அனுசரித்து நடக்க வேண்டும் என்று சொல்கிறார். இதை மட்டும் சொல்லிவிட்டு, பெண்களுக்கு சுதந்திரம் இல்லை என்பது தவறு. பெண்கள் கணவனை அனுசரித்து நடக்க வேண்டும் என்று சொல்லிய அதே இடத்தில் தான் கணவனும் பெண்ணைப் போற்றி நடக்க வேண்டும் என்று சொல்கிறார். இரண்டும் சேர்ந்தால் தான் வாழ்க்கை இனிக்கும். கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப் போவது தான் வாழ்க்கை என்பது தான் நடைமுறையிலிருக்ககூடிய விஷயம்.

ப்ரஜனார்த்தம் மஹாபாகா பூஜார்ஹா க்ருஹதீப்தய

ஸ்த்ரிய ஸ்ரீயச்ச கேஹேஷு ந விசேஷோஸ்தி கச்சன

– (மனு ஸ்ம்ருதி 9-26)

தாய்க்குலமான பெண்கள் போற்றத்தக்கவர்கள், வணங்கத் தக்கவர்கள், இல்லத்தின் விளக்காய் விளங்குபவர்கள், வீட்டின் மகாலட்சுமியாய்த் திகழ்பவர்கள். 

வேறு எந்த மதத்திலாவது, சுமங்கலி பூஜை என்று ஒரு பெண்ணை உட்கார்த்தி வைத்து பெண்ணை வழிபடக்கூடிய வழக்கம் இருக்கிறதா? ஒரு கன்யா பூஜை என்று 5 வயது பெண் குழந்தையை உட்கார்த்தி, 80 வயதிற்க்கு மேற்பட்டவர் அந்தக் குழந்தையின் காலில் விழுந்து வணங்கும் மரபு எந்த மதத்திலிருக்கிறது? எந்த நாட்டிலிருக்கிறது?

நம்முடைய மரபில் தான் பெண்களை தெய்வமாக வணங்கக் கூடிய ஒரு மரபைச் சார்ந்து நாம் இருக்கிறோம். ராமக்ருஷ்ண பரமஹம்சர் தன்னுடைய மனைவியான சாரதா தேவியை அம்பிகையின் வடிவமாகப் பார்த்து வணங்கினார் என்று நாம் கேட்கிறோம். அப்படி, ஒரு சின்னக் குழந்தையாக இருந்தாலும், வயது முதிர்ந்தவர்களாக இருந்தாலும், தன்னுடைய மனைவியாக இருந்தாலுமே, அம்பிகையினுடைய வடிவமாக, சக்தி வடிவமாக பார்க்கக்கூடிய மதத்தைச் சேர்ந்து நாம் இருக்கும் போது, அந்த மதத்தினுடைய தர்ம சாஸ்திர நூல்களில் பெண்களை எவ்வாறு இழிவுபடுத்திச் சொல்லுவோம்?

இந்த மாதிரி பெண்களை இழிவு படுத்தி சொல்வது என்று நம் நூல்களைச் சொல்வது எல்லாமே திரிபு படுத்தப்பட்ட வாதங்கள். நாம் அதனுடைய சாராம்சத்தைப் புரிந்து கொள்ளாமல், இப்போது திருக்குறளில்கூட இடையில் ஒரு வாக்கியத்தை எடுத்துப்பார்த்தால் தப்பாகதான் தெரியும். 

மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார்

வேண்டாப் பொருளும் அது

– (குறள் 901)

மனைவியை விரும்பி அவள் சொன்னபடி நடப்பவர் சிறந்த பயனை அடைய மாட்டார். கடமையை விரும்பியவர்க்கு வேண்டாத பொருளும் அதுவே. 

தையல் சொல் கேளேல் (ஆத்திசூடி 62) என்கிறார் அவ்வையார்  

இதெல்லாம் நாம் முன்னும் பின்னும் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். இதெல்லாம் பெண்களை இழிவுபடுத்தக்கூடியதா? நாம் அதனுடைய இடம், பொருள் ஏவலைக் காண வேண்டும். எந்த இடத்தில் எதற்காக சொல்லப்பட்டது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தலையும் இல்லாமல், வாலும் இல்லாமல் நடுவில் பார்த்தால் அப்படித் தான் புரியும். 

இடையிலிருந்து ஒரே ஒரு வரியை மாத்திரம் நம்முடைய வசதிக்காக எடுத்துக்கொண்டால், “நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்”, என்பது போல, முன்னும் பின்னும் பார்த்தால் தான் அந்த வாக்கியத்திற்கு அர்த்தம் புரியும்.

பல இடங்களில் கீதாசாரம் என்று எழுதி வைத்திருப்பதைக் காண்கிறோம்.

“எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.

 எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது.”

என்பது பல அலுவலகங்களிலும் இருப்பதைப் பார்க்கலாம். இப்படி ஒரு வாக்கியம் பகவத்கீதை மூல நூலில் இல்லவே இல்லை. ஆனால் கீதாசாரம் இது தான் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஏனென்றால், மூல பகவத் கீதையை நாம் படித்ததே இல்லை. படித்தது முழுவதும் மொழிபெயர்ப்பு. மூல நூல்களைப் படித்தவர்களுக்குத் தெரியும் பகவத் கீதையில் இப்படி ஒரு வாக்கியம் கிடையாது என்று.

அதுபோலத்தான், மூல நூல்களைப் படிக்கும்போது, நமக்கு அதனுடைய தெளிவு ஏற்படும். மனு தர்மத்திலேயே என்ன சொல்லப்படுகிறது என்றால். பொருளாதாரத்தில் பெண்களுக்கு அதிகாரம் உண்டு. இதை மிகத் தெளிவாக சொல்கிறது. வயதிற்கு வந்த பெண் தன்னுடைய மனதிற்குப் பிடித்தமான கணவனை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் உண்டு. இதெல்லாம் மனு தர்மம் சொல்லக்கூடியது. அப்போது பெண்களை ஆட்சியில் அமர்த்திப் பார்ப்பதும், பெண்கள் அதிகாரத்தோடு இருப்பதும் மற்ற நாடுகளுக்கும் மற்ற மதங்களுக்கும் வேண்டுமானால் புதிதாக இருக்கலாம். ஆனால், நம்முடைய மதத்தில் அது புதிது கிடையாது. பெண்ணை போற்றிப் பாதுகாப்பதே தர்ம சாஸ்த்ர நூலின் நோக்கம். ஆதவற்ற நிலையில் இருக்கும் பெண்களை அரசே காக்க வேண்டும் என்று கருணையுடனே  மனு ஸ்ம்ருதி  பேசுகிறது. 

வசா அபுத்ராஸு சைவம் ஸ்யாத் ரக்ஷணம் நிஷ்குலாஸு

பதிவ்ரதாஸு ச ஸ்த்ரீஷு விதவாஸ்வாதுராஸு ச (8-28)

 பிள்ளையில்லாத, கணவனை இழந்த பெண்களோ, அல்லது கணவனைப் பிரிந்து தனியாக வாழும் பெண்களோ நாட்டில் இருந்தால், அவர்களைப் பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.

எந்த ஒரு ஆண் மகனாவது தனியாக இருக்க முடியுமா? ஏதோ ஒரு காலகட்டத்தில் ஒரு பெண்ணை சார்ந்து தான் நம்முடைய வாழ்க்கை இருக்கிறது. சிறு குழந்தையாக இருக்கும்போது அம்மாவை சார்ந்து தான் இருக்கிறோம். இளமை பருவத்தில் மனைவியை சார்ந்திருக்கிறோம். நம்முடைய வாழ்வியல் அமைப்பே, அதனால் தானே கல்யாணம் என்ற ஒரு அமைப்பை வைத்திருக்கிறார்கள். அப்படி, நம் வாழ்வியல் நெறிமுறை ஆணும், பெண்ணும் ஒருவருக்கொருவர் சார்ந்து இருக்க கூடியதற்குப் பெயர் தான் நெறிமுறைகள். 

அதெல்லாம் எனக்கு வேண்டாம், என் இஷ்டம் போல நான் இருப்பேன் என்று இருப்பவருக்கு தர்ம சாஸ்திரம் எதற்கு? அவர்களுக்கு அவசியமே இல்லை. அதை கடைபிடிக்கப் போவதில்லை, அதில் நம்பிக்கை இல்லை என்பவர் அந்த புத்தகத்தைப் பற்றி பேசவே வேண்டாம். இந்த நெறிமுறைப்படி வாழ்வேன், தர்மத்தின்படி வாழ்வேன், எனக்கு என்று ஒரு கோட்பாடு இருக்கிறது, அந்த நெறிகளின் படி வாழ்க்கையை அமைத்துக்கொள்வேன் என்று நினைப்பவர்களுக்கு இந்த தர்ம சாஸ்திர நூல்களெல்லாம் பயனுள்ளதாக இருக்கும். கண்டதே காட்சி, கொண்டதே கோலம், என் இஷ்டப்படி தான் நான் வாழ்வேன் என்று இருப்பவர்களுக்கு எந்த நூலுமே பயன் தராது. நீதி நூல் மட்டும் அல்ல. அதன்படி பார்க்கும்போது மனுநீதி மட்டும் அல்ல, எந்த தர்ம சாஸ்திர நூலும் வாழ்வியல் நெறிமுறையைத்தான் சொல்கிறது. வாழ்வியல் நெறிமுறைகள், கட்டுப்பாடுகள் இவற்றை கேட்கமாட்டேன் என்று இருந்தால், அது அவரவர்களுடைய பிரச்சனை, நூலினுடைய பிரச்சனை அல்ல.

இன்றைய நடைமுறை

மனு தர்ம விதிகள் இப்போது நடைமுறையில் இருக்கிறதா என்பது ஒரு மிகப்பெரிய கேள்விக்குறி தான். மனு தர்மம் மட்டும் அல்ல, பல தர்ம நூல்கள் பரவலாக நடைமுறையில் இல்லை என்பதே நிதர்சனம். ஆனால் ஒரு சில விஷயங்கள் ஒரு சில இனக்குழுக்கள், ஒரு சில மக்கள் கட்டாயமாக அதை கடைப்பிடிக்கத்தான் செய்கிறார்கள்.

உதாரணத்திற்கு சொல்லவேண்டுமானால், வேறு முறையில் அது மாறி வந்துள்ளது. தர்மம் அதே தான் –  அதை நடைமுறைப்படுத்துதல் என்பது பல விஷயங்களில் மாறுதலை அடையத்தான் செய்திருக்கிறது. 

உதாரணமாக மனு தர்மம் சொல்லக்கூடிய விஷயம் ஒன்றை பார்ப்போம். 

பரதாராபிமர்சேஷு ப்ரவ்ருத்தான் ந்ரூன் மஹீபதி

உத்வேஜன கரைர்தண்டை சின்னயித்வா ப்ரவாஸயேத்

– (மனு ஸ்ம்ருதி 8-352)

பெண்களின் கற்புக்குக் கேடு விளைவிக்கும் ஆண்களுக்கு அதிகபட்ச தண்டனை கொடுக்க வேண்டும். பிறர் இத்தகைய தவறைச் செய்வதற்கே அஞ்சும் அளவுக்கு அந்த தண்டனை இருக்க வேண்டும்.

“ஒரு பெண்ணை பலவந்தப்படுத்துபவன் அல்லது பாலியல் ரீதியாக துன்புறுத்துபவன் இருந்தானானால், அவனுக்கு கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும். அது அரசுடைய கடமை”, என்று மனு தர்மம் சொல்கிறது. கொடுக்கக்கூடிய தண்டனை எப்படி இருக்க வேண்டும் என்றால், அந்த தண்டனையைப் பார்த்து, அந்த தப்பை இன்னொருவன் செய்வதற்கு பயம் உண்டாகும்படி, அந்த தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்று மனு தர்மம் சொல்கிறது. 

இது அப்படியே நடைமுறையில் உள்ளதா என்றால் வேறு விதமாக மாறுதல் அடைந்து இருக்கத்தான் செய்கிறது. அப்போது, அன்றைய காலகட்ட சூழ்நிலைகளில் இருந்த பலவிஷயங்கள் இன்றைய காலகட்டத்தில் இல்லை. உதாரணத்திற்கு, அன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கான திருமண வயது மிகக் குறைவாக இருந்தது. ஆண்களுக்கும் அவ்வாறே இருந்தது. இன்று திருமண வயது என்பது, அரசு 18லிருந்து 21 ஆக அதிகரித்து, இன்னும் கூடுதலாக்கப்போவதாக நமக்கு செய்திகள் வருகிறது. அப்படி இருக்கும்போது இந்த விஷயங்களை சட்டரீதியாக நடைமுறைப்படுத்த முடியாது. அந்தமாதிரியான மாறுதல்கள் அடையத்தான் செய்திருக்கிறது. மனு தர்மம் மட்டுமல்ல எல்லா தர்மங்களுமே அந்த மாதிரி காலகட்டத்தை, சட்டத்தை அனுசரித்து பல காரணங்களுக்காக மாறுதலை அடைந்து தான் ஆக வேண்டும் என்ற சூழ்நிலையில் நாம் இருக்கிறோம். 

நம்முடைய அறம், பொருள், இன்பம், வீடு என்ற இந்த நான்கும் தான் ஒரு மனித வாழ்க்கையினுடைய இலட்சியம். அதைத்தான் மனு என்பவர் வழிகாட்டுகிறார். அந்த வாழ்வியலுக்கான சட்ட திட்ட நெறிமுறைகள். 

அறத்தின் வழி நின்று, தர்மத்தின் வழி நடந்து பொருளை ஈட்டி, அதாவது எப்படி வேண்டுமானாலும் பணம் சம்பாதிக்கலாம் என்று சொல்லப்படவில்லை.

இன்று கூகுளுடைய தத்துவக் கோட்பாட்டைப் படிக்கும்போது, “You can make money without doing evil”, என்கிறார்கள். எந்த விதமான தவறான காரியமும் செய்யாமல் பணம் ஈட்ட வேண்டும் என்பது கூகுளுடைய ஒரு தத்துவக் கோட்பாடு. அதை நாம் ஒரு பெரிய விஷயமாகப் பாராட்டுகிறோம். இதைத்தான் நம்முடைய சாஸ்திரங்கள் சொல்கின்றன. நம்முடைய சாஸ்திரங்கள் சொல்லக்கூடிய சத்தியம் இது தான்.

“தர்மத்தின் வழி நடந்து, அப்படி தர்மத்தின் வழி நடந்ததனால் ஈட்டப்பட்ட பொருளைக்கொண்டு, அப்படி ஈட்டப்பட்ட பொருளைக்கொண்டு உன்னுடைய மனதில் ஏற்படக்கூடிய ஞாயமான ஆசைகளை நிறைவேற்றிக் கொண்டு, இப்படி ஒரு வாழ்வியல் வாழ்ந்து வீடுபேறு என்று சொல்லக்கூடிய மோக்ஷத்திற்கு உன்னை நீ தயார் படுத்திக்கொள்ள வேண்டும்”. இது தான் தர்ம சாஸ்திரங்கள் கூறக்கூடிய நெறிமுறை. இதைத்தான் மனு தர்மமும் சொல்கிறது.

Aravind Subramanyam V

Shri. Aravind Subramanyam, or “Sastha Aravind” as he is called fondly, is the great-grandson of Shri C V Srinivasa Iyer (Chaami Anna) who started the Panguni Uthram Festival at Sabarimala - thus tracing a century-old connection with the Sabarimala temple. He has done his research on Sastha worship for the past 24 years and has penned around 10 books about Lord Sastha. His magnum opus Shri Maha Sastha Vijayam (Complete Purana on Lord Sastha) is worth mentioning - a massive book of 500 pages. He has published research articles and books in the field of education and religion. He has also published articles and lectured extensively on Topics of Indian Heritage, Puranas and Devi Worship.

0 Reviews

Related post

1 Comment

  • This article should reach more people in the society , especially the youngsters. every one must be aware of the point by point rebuttal to the விஷ(ம) பிரச்சாரம் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *